உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதி ஆக மாறியவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்பியான இவர் மீது கடந்த 2005-ம் வருடம் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மற்றும் கடந்த ஜனவரியில் நடைபெற்ற உமேஷ் பால் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத், அவரது கூட்டாளி ஆகிய இருவரை சென்ற வியாழக்கிழமை காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

உமேஷ் பால் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஆதிக் அகமதுவும், அவரது சகோதரரான அஷ்ரப் அகமதுவும் நேற்று பிரயாக்ராஜுக்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது பிரயாக்ராஜில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பல பகுதிகளில் காவல்துறையின ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும்படி உயர்மட்டக் கூட்டத்தில் காவல்துறையினருக்கு உ.பி முதல்-மந்திரி அறிவுறுத்தியுள்ளார். அதோடு போலீஸ் அதிகாரிகளை உஷாராக இருக்கவும், மாநிலத்தில் அமைதி, சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.