
சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல லட்சங்களை இழந்துள்ளார். அந்நேரத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாததால் வங்கிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி சமாளித்துள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்த நண்பர்கள் ஹரிகிருஷ்ணனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் கையில் கொஞ்சம் கூட பணம் இல்லாத ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் இரவு நேரத்தில் தன் பெற்றோருடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற அவர் காலை 8 மணி ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளார்.
ஆனால் ஹரிகிருஷ்ணன் நீண்ட நேரமாக கதவை திறக்காத நிலையில் ஜன்னல் வழியாக தந்தை எட்டிப் பார்த்தார். அப்போது ஹரி கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் தன் மகனின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
இது தொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.