உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மதியாவ் பகுதியில் சங்கிலிப் பறிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நடுரோட்டில் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கொள்ளையர்களை, பின்னால் வந்த கார் ஓட்டுநர் ஒருவர் பல கிலோமீட்டர் தூரம் விடாமல் விரட்டிச் சென்ற அதிர்ச்சி காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று மதியாவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைலா பாலம் அருகே சுனிதா யாதவ் என்ற பெண் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு அங்கு வந்த கார் ஓட்டுநர்கள் கொள்ளையர்களைப் பிடிக்கத் தங்கள் காரில் பின்தொடர்ந்துள்ளனர்.

அதிவேகமாகப் பயணித்த கொள்ளையர்கள், காரில் பின்தொடர்ந்து வந்தவர்களை அச்சுறுத்தும் நோக்கில், தங்கள் இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டவும் முயன்றனர். இருந்தும், கார் ஓட்டுநர்கள் விடாமல் பின்தொடர்ந்த நிலையில், கொள்ளையர்கள் திடீரென ஒரு சந்தில் திரும்பிச் சென்று மறைந்து தப்பிவிட்டனர்.

கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் யாரும் இல்லாத நிலையில், கார் ஓட்டுநர்கள் பல கிலோமீட்டர் தூரம் சளைக்காமல் விரட்டிச் சென்றது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மதியாவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லக்னோவில் மற்றொரு சம்பவத்தில், காஜிபூர் காவல் நிலையப் பகுதியில் தாயும் மகளும் வீட்டிற்குத் திரும்பும்போது, ​​மற்றொரு இரு சக்கர வாகனக் கொள்ளையர்கள் ஒரு பெண்ணின் பணப்பையை  பறித்துச் சென்றதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.