ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் ராகேல் புளூர் என்ற பெண், நள்ளிரவில் தனது படுக்கையில் இரண்டரை மீட்டர் நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் உலகளவில் வைரலாகி வருகிறது. திங்கட்கிழமை நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராகேல், தனது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏதோ ஒரு கனமான பொருள் இருப்பதை உணர்ந்துள்ளார்.
முதலில் தனது செல்ல நாய் தான் மேலே ஏறி படுத்திருப்பதாக நினைத்த அவர், போர்வையின் அடியில் ஏதோ ஊர்ந்து செல்வதைக் கண்டு விழித்துள்ளார். உடனே தனது கணவரை அழைத்து அறையின் விளக்கை ஒளிரச் செய்தபோது, அவரது போர்வையின் மீது பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
மலைப்பாம்பைக் கண்டு ராகேல் அலறாமல் அமைதியாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பதற்றமடைய வேண்டாம் என்று ராகேலுக்கு அறிவுறுத்திய அவரது கணவர், மெதுவாக அவரை படுக்கையிலிருந்து அப்புறப்படுத்தினார். பின்னர் இருவரும் இணைந்து ஜன்னல் வழியாக அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
ராகேல் விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவர் என்பதால் பாம்புகளைக் கண்டு அஞ்சாமல் மிகுந்த மன உறுதியுடன் செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் இந்த வகை மலைப்பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், இவை சிறு விலங்குகளை வேட்டையாடக் கூடியவை. உணவு அல்லது வெப்பத்தைத் தேடி ஜன்னல் வழியாக அந்த மலைப்பாம்பு இரண்டாவது மாடியில் உள்ள ராகேலின் அறைக்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
