திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்புகள் இருப்பதாக அப்பகுதி வார்டு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் சில தினங்களாக முக்கிய சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த புகாரின் பேரில் நகராட்சி ஊழியர்கள் கால்வாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பகுதியில் உள்ள கால்வாய்களில் உள்ள அனைத்து மூடிகளையும் திறந்த போது மிகவும் மோசமான துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கால்வாய் மூடிகளையும் அடைத்து விட்டு ஒரு கால்வாயில் மட்டும் நெருப்பை பற்ற வைத்து பார்த்துள்ளனர். அப்போது திடீரென கால்வாயில் தீப்பற்றி மளமளவென எரிந்தது.

இதனால் பதறி பின் வாங்கிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் ஆய்வு மேற்கொண்டு பிரச்சனையை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கால்வாயை ஆய்வு செய்த போது திடீரென தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.