அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பிரேவர்டு நகரில், நடுவானில் பறந்துகொண்டிருந்த ஒரு சிறிய ரக விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானி விமானத்தை நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறக்கினார். அப்போது, அந்த விமானம் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.
View this post on Instagram
நேற்று இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பிரேவர்டு நகர்ப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானி அதிர்ச்சிக்குள்ளானார்.
வேறு வழியின்றி, விமானி விமானத்தை பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாகத் தரையிறக்கினார். தரையிறங்கியபோது, சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது விமானம் மோதியதில், காரை ஓட்டிச் சென்ற 57 வயதுப் பெண் லேசான காயமடைந்தார். ஆனால், விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
