தெலங்கானா மாநிலம் கண்ணம் மாவட்டத்தில் இருந்து வந்த செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீநகர்காலனி பகுதியைச் சேர்ந்த மெதிசெட்டி கிருஷ்ணா என்பவர், பிரபல ஆன்லைன் டெலிவரி செயலியான Zomato-வில் இருந்து ‘ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி’ ஒன்றை ஆர்டர் செய்தார். குறித்த ஆர்டர் கோனார்க் ஹோட்டலில் தயாரிக்கப்பட்டு அவரது வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டபோது, பிரியாணியில் உயிருடன் உள்ள சில கரைப்பான் பூச்சிகள் இருந்ததால் கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மொத்த குடும்பமும் உணவை உண்பதற்காக மேசையில் அமர்ந்தபோது, சிறிது சாப்பிட்ட பிறகு பிரியாணியில் ஓடும் பூச்சிகளை பார்த்துள்ளனர். உடனே உணவை நிறுத்திவிட்டு, Zomato செயலி மூலம் ஆர்டர் விவரங்களை பார்த்ததில் அது கோனார்க் ஹோட்டலில் இருந்து வந்ததாக தெரியவந்தது. அதற்குப் பிறகு, கிருஷ்ணா நேரில் அந்த ஹோட்டலுக்குச் சென்று நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் “நாங்கள் சுத்தமாக தான் உணவுகளை தயாரிக்கிறோம்” என்ற வார்த்தையுடன், முந்தைய கட்டணத்தை திருப்பி கொடுக்க தயார் எனத் தெரிவித்துள்ளனர்.

உணவில் இந்த அளவுக்கு கவனக்குறைவாக நடந்துகொள்வது மக்கள் உயிருக்கு அபாயமாக இருக்கலாம் என்று கிருஷ்ணா கவலை தெரிவிக்கிறார். “நானும் என் குடும்பமும் அந்த பிரியாணி சாப்பிட்டிருக்கோம், இதனால் உடல்நலக்கேடு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கப்போவது யார்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த புகாரை பகிர்ந்துள்ளார் கிருஷ்ணா, இதனால் பலரும் Zomato மற்றும் ஹோட்டல்களின் உணவுப் பாதுகாப்பு தரம் குறித்த கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.