ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தீக் மாவட்டத்தில் சரளாதேவி என்ற 42 வயது பெண்ணை அவரது மாமியார் மாட்டு சாண குவியலில் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்த நிலையில் கொலைக்கான ஆதாரங்களை குடும்பத்தினர் அழிக்க முயன்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு அசோக் குமார் என்பவர் உடன் சரளாதேவிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லாததால் பல ஆண்டுகளாக கணவன் குடும்பத்தினரால் அந்த பெண் சித்திரவதைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. சரளாதேவியை அவரது கணவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்திய நிலையில் மாமியாரும் டார்ச்சர் செய்துள்ளார். இது தொடர்பாக சரளாதேவியின் சகோதரர் விக்ராந்த் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாதி எரிந்த நிலையில் சரளாதேவியின் உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கிராம மக்கள் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி சீருடைகளை கிழித்து தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் இது தொடர்பாக மாமியார் ராஜ்வதி, கணவன் அசோக்குமார், மாமனார் சுக்பீர் சிங், மைத்துனர்கள் பூஜா மற்றும் பூனம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதால் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
