உலகின் மிக உயரமான பாலமான சீனாவின் குய்ஜோ மாகாணத்தில் அமைந்துள்ள ஹுஆஜியாங் பெருங்கணவாய் பாலம், ஆகஸ்ட் 21 முதல் 25 வரை நடந்த இறுதி சுமை பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தப் பரிசோதனையில், ஒவ்வொரு லாரியும் 35 டன் எடையுடன் மொத்தம் 96 லாரிகள், சுமார் 3,360 டன் எடையை ஏற்றி, பாலத்தில் மெதுவாக பயணித்து, குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன.

400-க்கும் மேற்பட்ட சென்சார்கள் மூலம் பாலத்தின் முக்கிய பகுதிகள், கோபுரங்கள், கம்பிகள் மற்றும் தொங்கு கயிறுகளில் ஏற்படும் சிறிய அசைவுகள் கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு தரத்தை உறுதி செய்தனர். இந்த பாலம் செப்டம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

இந்த மாபெரும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2022-ல் தொடங்கப்பட்டு, 2,890 மீட்டர் நீளமும், 1,420 மீட்டர் மையப்பகுதியும் கொண்டதாக, மலைப்பகுதியில் கட்டப்பட்ட மிகப் பெரிய பாலமாக உருவாகியுள்ளது. இதன் உயரம் 625 மீட்டராக உள்ளதால், இது உலகின் மிக உயரமான பாலமாக உள்ளது.

குய்ஜோ மாகாணத்தில் 30,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன, இதில் உலகின் முதல் மூன்று உயரமான பாலங்களும் அடங்கும், இதனால் இப்பகுதி “உலகின் பாலங்கள் அருங்காட்சியகம்” என்று அழைக்கப்படுகிறது. கட்டுமான மேலாளர் வு ஜாவோமிங், “இந்த பாலம் ஒரு மாபெரும் பொறியியல் சாதனை” என்று கூறி, பெரும் கான்கிரீட் ஊற்றுதல் மற்றும் கடுமையான காற்றுக்கு மத்தியில் செங்குத்தான பள்ளத்தாக்கு நிலப்பரப்பை சமாளித்து இதை உருவாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.