பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இந்த பாறை மேல்தெருவில் வசித்து வரும் வெங்கடாசலம் என்பவரின் வீட்டின் சுவர் மீது விழுந்தது. ஆனால் அருகில் மற்றொரு பாறை இருந்ததால் அதில் மோதி தடுத்து நின்றது. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதோடு அந்த தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் உயிர் தப்பினர். பாறை உருண்டு விழுந்த போது பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த அதிகாரிகள் சரிந்து விழுந்த பாறையை பார்வையிட்டனர். இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.