உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியில் வசித்து வந்த ராதா மற்றும் ஜியா ஆகிய இரு சகோதரிகள், தாங்கள் வளர்த்து வந்த டோனி என்ற செல்லப்பிராணி நாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாகப் பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த இந்த சகோதரிகள், தங்களது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர்.
கடந்த ஒரு மாதமாக அந்த நாய் வயிற்றுப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அது பிழைக்காது என்ற அச்சத்தில் ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அவர்கள் இருவரும் வீட்டில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒருவரும், சிகிச்சை பலனின்றி மற்றொருவரும் உயிரிழந்தனர். தங்கள் செல்லப்பிராணி உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களுக்குப் பிறகு அதனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாகக் கூறிவிட்டு அவர்கள் மறைந்த நிலையில், அவர்கள் இறந்த மூன்றே நாட்களில் அந்த நாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அந்தச் சகோதரிகள் சமூக வலைதளங்கள் அல்லது வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்ததும், குடும்பத்தின் வறுமை மற்றும் தந்தையின் உடல்நிலை காரணமாக ஏற்கனவே மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த நாய்க்கும் முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு மகள்களையும் தாங்கள் நேசித்த செல்லப்பிராணியையும் இழந்து வாடும் அந்தக் குடும்பத்தின் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
