பஞ்சாப் மாநிலம் ஹர்மன் நகரில் வசித்து வந்தவர் அமந்தீப் சிங் (42). பில்டராகவும், பைனான்சியராகவும் தொழில் செய்து வந்த இவர், தனது மனைவி ஜஸ்பீர் கவுர் (40) மற்றும் இரு மகள்களுடன் (10 வயது மற்றும் 6 வயது) வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை இவர்களது வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அமந்தீப் சிங் தனது மனைவி மற்றும் பிஞ்சு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த வீட்டிற்கு இவர்கள் குடியேறி 5 மாதங்களே ஆகும் நிலையில், அடுத்த சில நாட்களில் புதிய சலூன் ஒன்றை அமந்தீப் திறக்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்விதமான குடும்பப் தகராறுகளும் வெளியே தெரியாத நிலையில், இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்தும், அண்டை வீட்டாரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
