குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு செய்யும் தரகர் கும்பலை அணுகியுள்ளார். இந்நிலையில் தரகர் கும்பல் கொடுத்த ஆலோசனைப்படி பிரிஜிகுமார் தனது மனைவி பூஜா, மகன் தன்மென் ஆகியோருடன் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மும்பையில் இருந்து துருக்கி சென்றுள்ளார்.

துருக்கியில் இருந்து அதன் பின் மெக்சிகோ சென்றுள்ளார். மெக்சிகோவின் எல்லை வழியாக அமெரிக்காவில் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் மெக்சிகோ – அமெரிக்கா எல்லையில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பால் மிகப்பெரிய சுவர் எழுப்பப்பட்டது. ட்ரம்ப் சுவர் என அழைக்கப்பட்ட இந்த சுவரை தாண்ட நினைத்த பிரிஜிகுமார் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த சுவற்றின் மீது ஏறி உள்ளார். அப்போது மூன்று பேரும் சுவற்றின் உச்சியில் இருந்து கீழே விழுந்துள்ளனர். இதில் பிரிஜிகுமார் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி பூஜா மற்றும் மகன் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் பூஜா, தன்வென்னை படுகாயங்களுடன் மீட்டுள்ளனர். அதேசமயம் உயிரிழந்த பிரிஜிகுமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிஜிகுமாரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய 7  பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அகமதாபாத், காந்தி நகரை சேர்ந்த இரண்டு கடத்தல் காரர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.