மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தில் இருந்து, பிடிபட்ட குற்றவாளி ஒருவர் சினிமா பாணியில் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், போலீஸ் வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டு காவலர்கள் அதனைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

 

இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், வாகனத்தின் கதவை நைசாகத் திறந்துவிட்டு, காவலர்கள் கவனிக்கும் முன்பே வெறும் காலால் மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக அவரைத் துரத்திச் சென்ற போதிலும், அந்த நபரின் அதிவேக ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர்.

சாலையில் சென்ற பொதுமக்கள் பலரும் இந்த இதனை கண்டு திகைத்துப் நின்ற நிலையில், இந்தச் சம்பவம் ஒரு பாலிவுட் படத்தின் சண்டைக் காட்சியைப் போலவே இருந்ததாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினரின் கவனக்குறைவைச் சாடி வரும் நெட்டிசன்கள், அந்த நபர் மீண்டும் பிடிபட்டாரா அல்லது அது ஒரு திட்டமிட்ட தப்பியோட்டமா என்பது குறித்து விளக்கம் கேட்டு வருகின்றனர்.