கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு விகாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விகாஸ், மாணவியை காதலிப்பதாக கூறி, ஆசை வார்த்தைகளால் நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தயங்கிய மாணவி, பின்னர் அவரது பேச்சுகளை நம்பி காதலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, விகாஸ் அங்கு சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்தை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, தனது நண்பர்களான பிரசாந்த், சேத்தன் ஆகியோருடன் உல்லாசமாக இருக்குமாறு மாணவியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில், மிரட்டலை தொடர்ந்து, சேத்தனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விகாஸ், பிரசாந்த், சேத்தன் ஆகிய மூவரும் சேர்ந்து மாணவியை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்துள்ளது. ஆனால் சமூக அவமானம் மற்றும் அச்சம் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுததைத் தொடர்ந்து, அவர்களுடன் சேர்ந்து மாகடி டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் விகாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பிரசாந்த், சேத்தன் ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேத்தன் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்ததும், அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருந்து, பிரசவத்திற்காக தாய் வீட்டில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே, விகாஸ் மற்றும் பிரசாந்துடன் சேர்ந்து, தனது வீட்டில் வைத்து நண்பரின் காதலியை சேத்தன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கடும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
