தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், ஏசி அல்லாத சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளிலும் (Sleeper Class) பயணிகளுக்குக் கட்டணத்தின் அடிப்படையில் பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படும். பல நாட்களாக பயணிகள் விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதில் தலையணை, தலையணை கவர் மற்றும் பெட்ஷீட் ஆகிய மூன்றையும் பெற ₹50 கட்டணம் வசூலிக்கப்படும். போர்வை (Blanket) மட்டும் தேவை என்றால் ₹20 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். விருப்பமுள்ள பயணிகள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி, பெட்ஷீட் மற்றும் தலையணையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக, சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-சென்ட்ரல் மங்களூரு எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 10 ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்குப் பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இந்தத் திட்டம் மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஸ்லீப்பர் பெட்டியில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.