
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி ஊராட்சி ரங்கம் பேட்டை என்ற கிராமத்தில் மலையடிவார பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி வரலாற்று துறை தலைவர் விஜயரங்கம், வரலாற்று துறை பேராசிரியர் ஜெயவேல் மற்றும் 25 மாணவ-மாணவிகள் அங்கு சென்றனர். அதன்பின் கடந்த 2 நாட்களாக கள ஆராய்ச்சியில் ஈடுபட்டு கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்த பின், இது பற்றி வரலாற்று துறை தலைவர் விஜயரங்கம் மற்றும் பேராசிரியர் ஜெயவேல் ஆகியோர் கூறியுள்ளனர்.
அதாவது 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தின் குறுநில மன்னன் போருக்கு சென்றபோது புடைப்பு சிற்பங்களுடன் வெண் கொற்ற குடை பிடித்து குதிரையின் மேல் வாள் ஏந்தி போருக்கு செல்லும் குறுநில மன்னனை வெண் சாமரம் வீச அவனது மனைவிகள் வாழ்த்தி அனுப்புகின்றனர். இது போன்ற புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இதனையடுத்து மற்றொரு புடைப்பு சிற்பத்தில் 2 அரச குல பெண்களின் நினைவுக்கல்லில் ஒரு பெண் கிளியை தன் கையில் ஏந்தியவாறு உள்ளது. குறுநில மன்னன் இறந்த பின் அவருடைய மகன் பட்டத்து இளவரசன் போரை நடத்தி செல்கிறான். மேலும் அவனது மனைவிகள் வெண்கொற்ற குடைகளுடன் வெண் சாமரம் வீசி வாழ்த்தி வழியனுப்பி வைப்பதை போன்றும் காணப்படுகிறது.
இதன் அருகில் அக்னி குண்டம் ஒன்று காணப்படுவதாகவும், போரில் வீர மரணம் அடைந்த மன்னன், இளவரசன், படை வீரர்கள் ஆகியோரின் மனைவிகள் தங்கள் உயிரினை அக்னிகுண்டத்தில் மாய்த்து இறந்துள்ளது. வடநாட்டில் சத்ரியர் மரபில் வீரர்கள் போரில் மரணமடைந்தால், தீயில் இறங்கி மாய்த்து கொள்வது போல் இங்கு அக்னி குண்டம் மண்ணில் மூடி புதைந்திருப்பது என்று அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட இந்த புடைப்பு சிற்பங்களை கிராம மக்கள் தூய்மைப்படுத்தினர். பின் மஞ்சள், குங்குமம்மிட்டு வழிப்பாடு நடத்தினர்.