கேரள மாநிலம் கொச்சியில் சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி ஒருவர், தனது ஆதார் அட்டையை பெற்றுக்கொள்வதற்காக தான் ஏற்கெனவே பிடிபட்ட காவல் நிலையத்துக்கே சென்ற சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் தேமாஜி பகுதியைச் சேர்ந்த 28 வயதான மதுர்ஜ்யா சோனாவால் என்பவர், எர்ணாகுளம் மாவட்டம் பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களின் செல்போன்களை திருடியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஆலுவா துணைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி மாலை கைதிகளுக்கு வழங்கப்பட்ட வழக்கமான ஓய்வு நேரத்தை பயன்படுத்தி சோனாவால் சிறையில் இருந்து தப்பியுள்ளார். சமையலறை பகுதி வழியாக சென்று சுற்றுச்சுவரில் ஏறி அவர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. கைதிகளை மீண்டும் அறைகளுக்குள் அடைப்பதற்கு முன்பு எண்ணிக்கை எடுத்தபோதுதான் அவர் காணாமல் போனது சிறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தப்பிச் சென்ற சோனாவால் எதிர்பாராத விதமாக பெரும்பாவூர் காவல் நிலையத்துக்கே சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம் தனது ஆதார் அட்டையை கேட்டதாகத் தெரிகிறது. தன்னை முன்பு பிடித்த போலீஸார் தற்போது பணியில் இருக்க மாட்டார்கள் என்றும், தன்னை உடனடியாக யாரும் அடையாளம் காண முடியாது என்றும் அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாராலும் அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இதனால், ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து எளிதாக சென்றுவிடலாம் என அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால், சோனாவாலின் கணக்கு சிறிது நேரத்திலேயே தலைகீழானது. சிறையில் இருந்து அவர் தப்பிய தகவலுடன் வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பை பார்த்திருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி, காவல் நிலையத்திலேயே அவரை அடையாளம் கண்டார். இதை உணர்ந்த சோனாவால் அங்கிருந்து உடனடியாக மீண்டும் தப்பி ஓடியுள்ளார். போலீஸார் அவரைத் துரத்திச் சென்றபோதும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர் மீண்டும் தப்பியதாக கூறப்படுகிறது. தற்போது அவரை பிடிக்க எர்ணாகுளம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
