பிரபல டிவியின் சமையல் போட்டியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் செஃப் தாமு. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே நடுவராக இருந்து வரும் அவர், தனது கலகலப்பான பேச்சினாலும் அன்பான குணத்தினாலும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெரும்பாலும் நிகழ்ச்சியில் அமர்ந்துகொண்டே பேசுவதைப் பார்த்திருப்போம். இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 7-ன் அரையிறுதி சுற்றில் செஃப் தாமு பங்கேற்கவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

அவர் அரையிறுதிக்கு வராததைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் சிலர் அவர் இறந்துவிட்டதாகத் தவறான வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர். இந்த வதந்தி காட்டுத்தீ போல பரவி ரசிகர்களிடையே பெரும் கவலையை உருவாக்கிய நிலையில், இதற்கு விளக்கம் அளித்து செஃப் தாமு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர், “எனக்குக் காலில் ஊசி போட்டதால் கடுமையான வலி இருந்தது. அதனால்தான் என்னால் அரையிறுதிச் சுற்றில் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஆனால், தற்போது நான் நலமாக இருக்கிறேன். தயவுசெய்து இதுபோன்ற பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“>

மேலும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிச் சுற்றில் தான் நிச்சயமாகப் பங்கேற்றிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.