பாலிவுட் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் பலரைக் கவர்ந்த மூத்த நடிகை நீனா குப்தா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் மற்றும் முதல் திருமணம் குறித்துப் பல அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது விவேக் மெஹ்ரா என்பவரைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர், கடந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்துள்ளார்.
நீனா குப்தாவின் முதல் கணவர் பெயர் அம்லன் குசும் கோஷ் ஆகும். ஐஐடியில் படித்தவரை விரும்பிய நீனா, அவரைத் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தத் திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்காமல் முடிவுக்கு வந்தது. தனது வாழ்க்கையில் திரைப்படங்களிலும் புத்தகங்களிலும் சொல்லப்படும் உண்மையான காதலைத் தான் அனுபவித்ததே இல்லை என்றும், தன் மீது யாரும் அப்படிப் பைத்தியமாக இருந்ததில்லை என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது பிரபல மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் உடனான உறவுதான். திருமணத்திற்கு முன்பே விவியன் மூலம் கர்ப்பமான நீனா குப்தா, அதை விவியனிடம் தெரிவித்துள்ளார். அவர் குழந்தையைப் பெற்றெடுக்குமாறு கூறவே, நீனா தைரியமாகத் தனது மகள் மசாபாவைப் பெற்றெடுத்துத் தனியாகவே வளர்த்து ஆளாக்கினார்.
தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் கடந்தகால உறவுகள் குறித்துப் பேசிய நீனா, “நமது தனிப்பட்ட உணர்வுகளையும் கடந்த காலத்தையும் யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்றும், நிகழ்காலத்தில் வாழ்வதே முக்கியம் என்றும் எனது மகள் மசாபாவிடம் அடிக்கடி கூறுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் சமூகத்தின் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் மீறி, ஒரு தனி ஒரு தாயாகத் தனது மகளை வளர்த்து சாதிக்க வைத்த நீனா குப்தாவின் வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வியப்பையும் தைரியத்தையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
