ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில்  நடந்துள்ள விபத்து ஒன்று நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டமைப்பு வசதிகளால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காது, மூக்கு, தொண்டை  வார்டில் கடந்த திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ரேணு (59) என்ற பெண், தனது சகோதரி சாந்தோசுக்கு செய்யப்பட்ட காது அறுவை சிகிச்சையைக் கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

 


சாந்தோசு படுத்திருந்த படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் அமர்ந்திருந்த ரேணுவின் மீது திடீரென மேற்கூரை மின்விசிறி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ரேணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியதுடன், வார்டில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உண்டானது.

விபத்து நடந்து சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதன் பிறகு செவிலியர்கள் மூலம் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், தகவல் தெரிவிக்கப்பட்டு சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னரே ஆம்புலன்ஸ் வந்துசேர்ந்து, காயமடைந்த ரேணுவை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

 

அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அவரது காயத்திற்கு 12-க்கும் மேற்பட்ட தையல்களைப் போட்டனர்; ஆனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. மாறாக, பொது மருத்துவத் துறையில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட அவர், இறுதியில் மீண்டும் அதே ENT வார்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு மருத்துவத்துறை மருத்துவர் வந்து பரிசோதித்து மேல்  சிகிச்சையை முடிவு செய்வார் என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.