மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாஸ்வன் அரசு நிதியுதவி பெறும் பழங்குடியின குடியிருப்பு ஆசிரமப் பள்ளியில், முதல் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் ஒருவன் கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பள்ளியில் தங்கிப் படிக்கும் மாணவனுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பே லேசான காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தச் சிறுவனுக்கு, திடீரென மீண்டும் மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடலளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

திடீரெனச் சிறுவனின் உடலிலிருந்த ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறையத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரை உடனடி சிகிச்சைக்காக மனோர் பகுதியில் உள்ள கிராமப்புற மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அச்சிறுவனின் நிலைமை மேலும் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கான துல்லியமான காரணம் என்னவென்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் நடந்த கையோடு, அந்தப் பள்ளியில் தங்கியிருக்கும் மற்ற மாணவர்களுக்கும் சுகாதார சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதில் மேலும் 26 மாணவர்களுக்குச் சளி, இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அம்மாநிலத்தில் உள்ள விடுதிப் பள்ளிகளில் இதுபோன்ற அடுத்தடுத்த அசம்பாவிதங்களும் நோய் பாதிப்புகளும் தொடர்கதையாகி வருவது, அங்குள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் குறித்தான மிகப்பெரிய கேள்வியையும், பெற்றோர் மத்தியில் பெரும் பீதியையும் கிளப்பியுள்ளது.