உக்ரைன் – ரஷ்யா போர் பல ஆண்டுகளாகத் தொடரும் சூழலில், திடீரென்று அமெரிக்காவின் மாபெரும் ராணுவ விமானம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தரையிறங்கியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை போக்குவரத்து விமானமான C-17A Globemaster III, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள வ்னுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானப் போக்குவரத்துத் தரவுகளின்படி ( இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வரவில்லை. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. அருகே உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து முதலில் புறப்பட்டுள்ளது. அங்கிருந்து லாட்வியா நாட்டின் தலைநகரான ரிகா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேராக ரஷ்யாவின் மாஸ்கோ வ்னுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த ராணுவ விமானம் தங்கள் நாட்டில் தரை இறங்கியது குறித்து ரஷ்ய தரப்போ அல்லது கிரெம்ளின் மாளிகையோ எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கவில்லை. “இது குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை” என்று கிரெம்ளின் தரப்பு சுருக்கமாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த திடீர் வருகைக்கான காரணம் குறித்து சர்வதேச ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன:
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இந்தப் பயணம் தூதரக ரீதியான ரகசிய நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிஐஏ இயக்குனர் ஜான் ராட்கிளிஃப் அல்லது உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் தரப்பு ரஷ்ய அதிகாரிகளைச் சந்திப்பதற்காக இந்த விமானத்தைப் பயன்படுத்தி மாஸ்கோ சென்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதுமின்றி வந்து இறங்கியுள்ள இந்த ராணுவ விமானம் எதற்காகச் சென்றது என்ற உண்மைக் காரணம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் C-17A Globemaster III போன்ற ராணுவப் போக்குவரத்து விமானங்கள் பொதுவாக ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் உயரதிகாரிகளின் நீண்ட தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
