ஐக்கிய நாடுகள் சபையின் இனப் படுகொலை மற்றும் நிறவெறி ஒழிப்பு தொடர்பான குழு (CERD), இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்கள், தலித்துகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கடுமையான கவலை தெரிவித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியா இந்த மதிப்பாய்வை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

CERD வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் சட்டம்-ஒழுங்கைப் பேணும் முகமைகளால் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் (குறிப்பாக தலித்துகள்), மற்றும் பெங்காலி பேசும் முஸ்லிம்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் மீது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சட்டவிரோதக் படுகொலைகள் சித்திரவதைகள், முறையான ஆவணங்களின்றி நீண்டகாலக் காவலில் வைத்தல், மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியாக்கள், பெங்காலி பேசும் முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான காவல்துறையின் தீவிர நடவடிக்கைகள், இன ரீதியான சுயவிவரப் பகுப்பாய்வு  மற்றும் தன்னிச்சையான கைதுகள் குறித்துக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சர்வதேசப் பாதுகாப்பு தேவைப்படுவோரை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாதியமைப்பு என்பது சமூக அந்தஸ்து, கல்வி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதில் இன்றும் ஒரு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஐ.நா. குழு சுட்டிக்காட்டியுள்ளது. வரலாற்று ரீதியான சமூகப் பாரம்பரியங்களைக் கொண்ட இந்தச் சாதியமைப்பு முறை குறித்துக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 182 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டமைப்பின் கீழ், இனப் பாகுபாட்டை ஒழிக்கவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தவும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கட்டுப்பட்டுள்ளன.

இந்த மதிப்பாய்வில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது. அப்போது இந்தியாவின் பன்முகத்தன்மை, பரப்பளவு மற்றும் நாட்டின் சிக்கலான சூழல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய இந்தியத் தரப்பு, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் மூலம் அனைத்து இந்தியர்களுக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்யும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தது. மேலும் ஐ.நா. குழுவின் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்கள் சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்பட்டவை அல்ல என்றாலும், அவை நாடுகளின் மீதான நற்பெயர் மற்றும் மனித உரிமைப் பதிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.