திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது.
அதாவது சிற்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (எ) ரூபன் (32). பெயிண்டராக வேலை செய்து வந்த இவர் மீது சில அடிதடி வழக்குகளும், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த புகாரும் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல், நேற்று காலை 11 மணியளவில் தனது நண்பர் வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு பைக்கில் சென்றுள்ளார். வெங்கடேசன் பைக்கை ஓட்ட, பின்னால் மாரி அமர்ந்து சென்றுள்ளார்.
பாகல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்த போது, திடீரெனப் பின்னால் வந்த கார் ஒன்று அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாரியைச் சுற்றி வளைத்தது. உயிர் தப்பிக்க மாரி அலறிடித்துக் கொண்டு ஓட முயன்றார்; ஆனால், அந்த கூட்டம் அவரைப் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் மாரியின் கையின் மணிக்கட்டுப் பகுதி துண்டாகித் தனியாக விழுந்ததுடன், முகம் முழுவதும்படி கொடூரமாகச் சிதைக்கப்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலையை அரங்கேற்றிய அந்த கும்பல் மீண்டும் காரில் ஏறித் தப்பியோட முயன்றது. அப்போது பதற்றத்தில் அவர்கள் ஓட்டிய கார் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. உடனே உஷாரான அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அதில் மூன்று பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் சிக்கிய கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீனா (25), நரேஷ் (20), விக்கி (எ) கலாநிதி (23) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மேலானூர் பகுதியைச் சேர்ந்த பேரரசு (19), ராஜ்குமார் (20) ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.
இது பற்றி காவல்துறையின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட தீனாவின் திருமணமான சகோதரி தீபாவுடன், மாரி கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபாவின் கணவர் அவரை அடித்துத் துன்புறுத்தித் தாய் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார்.
இதன் காரணமாகத் மனமுடைந்த தீபா கடந்த டிசம்பர் மாதம் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது சகோதரியின் சாவுக்குக் காரணமான மாரியைப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் தீனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொடூரத் திட்டத்தை நிறைவேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பெயிண்டர் மாரிக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
