ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் இணைந்து கணவரைப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையை அரங்கேற்றிவிட்டு சாவகாசமாக இருந்த குற்றவாளிகளைப் போலீசார் வெறும் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஃபரிதாபாத்தில் உள்ள மோஜாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம்வீர் (42). உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது மனைவியுடன் மோஜாபாத் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று மோஜாபாத் கிராமத்தில் உள்ள ஒரு குழியில் ஒருவர் புதைக்கப்பட்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மண்ணைத் தோண்டி ஷியாம்வீரின் உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்ட ஷியாம்வீரின் சகோதரர் ரம்பீர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷியாம்வீரின் வீட்டில், உ.பியை சேர்ந்த காமத் என்ற நபர் தங்கியிருந்துள்ளார். அப்போது ஷியாம்வீரின் மனைவி கேசவனுக்கும்  காமத்திற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கணவர் ஷியாம்வீருக்குத் தெரியவந்ததால், அவர்களுக்கிடையே அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஷியாம்வீரை வழியிலிருந்து அகற்ற கேசவனும் காமத்தும் சேர்ந்து கொடூரத் திட்டம் தீட்டியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை, திட்டத்தின்படி ஷியாம்வீருக்குக் காமத் மது குடிவத்துள்ளார். அவர் முழுமையாகப் போதையானதும், வீட்டின் அருகே இருந்த இன்டர்லாக்கிங் டைல்ஸ் கல்லைக் கொண்டு அவரது தலையில் பலமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க மனைவி கேசவன் வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர், வீட்டின் அருகே  உள்ள ஒரு குழியில் ஷியாம்வீரின் உடலைப் புதைத்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் நாடகமாடியுள்ளனர்.

மேலும் புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், 24 மணி நேரத்திற்குள் மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர். தற்போது இரண்டு குற்றவாளிகளிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.