ஹரியானா மாநிலம் குருகிராமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நபர் ஒருவர், அங்கிருந்தபடியே காரின் கூரை மீது ஏறி அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் இந்தச் செயல் நெட்டிசன்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. குருகிராமில் பெய்த பருவமழை காரணமாகச் சாலைகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
அலுவலகத்திற்கு புறப்பட்ட நபர் ஒருவரின் வாடகை கார் கடுமையான வெள்ளத்தில் சிக்கிப் பாதியிலேயே பழுதாகி நின்றது. மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அலுவலகத்திற்கு நேரத்திற்குச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த அந்த நபர், உடனடியாகத் தனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யும் அனுமதியைப் பெற்றுள்ளார்.
A man was on his way to the office when his cab broke down because of waterlogging in Gurugram and the traffic was insane.
So he called his office, took WFH and started working on his laptop… sitting on the roof of the cab 😭 pic.twitter.com/VLu7T4nreY
— Lakshay Mehta (@lakshaymehta08) August 25, 2026
காரின் உள்ளே சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, அவர் தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு யாரும் எதிர்பாராதவிதமாக காரின் கூரை மீது ஏறி அமர்ந்துள்ளார். சுற்றிலும் வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றுகொண்டிருக்க, இவர் சற்றும் பதற்றமின்றி தனது மடிக்கணினியைத் திறந்து அலுவலகக் கூட்டங்களிலும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவத்தை லக்சய் மேத்தா என்ற எக்ஸ் (X) தள பயனர் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “இதுதான் ஒர்க் ஃரம் ஹோம் (WFH)-ன் உச்சக்கட்டம்” என்று பலரும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர். மேலும் மோசமான வானிலை, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் அலுவலகப் பணிகள் ஆகியவை ஒற்றைப் புள்ளியில் சந்திக்கும்போது, மக்கள் எத்தகைய சூழ்நிலைகளுக்கும் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் எனப் பலரும் பாராட்டியும், நகைச்சுவையாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
