மனித உயிருக்குக் கடுமையான ஆபத்தையும், நச்சுத்தன்மையையும் விளைவிக்கக்கூடிய ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை உணவுப் பொருள் போல ஆன்லைனில் விற்பனை செய்த குற்றத்திற்காக அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய முன்னணி நிறுவனங்களின் உணவுப் பாதுகாப்பு உரிமங்களைக் கர்நாடக அரசு அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

​பூஜை மற்றும் சில மருத்துவக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஊமத்தங்காய் மற்றும் விதைகளை, இந்த ஆன்லைன் நிறுவனங்கள் உணவுப் பொருட்களின் பட்டியலின் கீழ் FSSAI உரிம எண்களுடன் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்தபோது இலவசப் பொருளாக நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் அனுப்பி வைக்கப்பட்டதாகச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

​புகாரைத் தொடர்ந்து கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், இந்நிறுவனங்களின் பிரதான கிடங்குகளில் ஊமத்தங்காய் பாக்கெட்டுகள் FSSAI முத்திரையுடன் வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டபோது நிறுவனங்கள் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததால் அமேசான், இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களின் உணவு உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

​மேலும், அந்த ஆன்லைன் தளங்களில் ஊமத்தங்காய் தொடர்பான அனைத்து விளம்பரங்கள் மற்றும் விற்பனைப் பட்டியல்களை உடனடியாக அகற்றவும், அவற்றைச் சப்ளை செய்த விற்பனையாளர்களின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் உணவுப் பொருட்கள் என்ற பெயரில் ஆபத்தான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.