உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் பகுதியில், இணையதள மற்றும் சமூக வலைதள மோகம் சிறுவர்களை எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

11 வயது மற்றும் 7 வயது நிரம்பிய இரு சிறுவர்கள், தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் திடீரென வீட்டை விட்டு மாயமாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் சிறுவர்களைக் காணாததால் பதறியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினரின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

ஆனால் எங்குத் தேடியும் சிறுவர்களைப் பற்றிய எந்தவொரு தடயமும் கிடைக்காததால், பயந்துபோன பெற்றோர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தைப் உணர்ந்த காவல்துறை, ‘மிஷன் சக்தி’ குழுவுடன் இணைந்து அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியது.

சுமார் 2 மணிநேரத் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, அண்மையில் இருந்த ஒரு பண்ணை வீட்டின் அருகில் உள்ள பாழடைந்த பகுதியில் சிறுவர்கள் இருவரும் ரகசிய முகாம் அமைத்து பதுங்கியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான், யூடியூப்பில் டிரெண்டாகி வரும் ’24-Hour Secret House Challenge’ என்ற விளையாட்டு வீடியோவை தொடர்ந்து பார்த்து வந்ததும், அதில் வருவதைப் போலத் தங்களும் 24 மணி நேரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளிந்து விளையாட வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

டிஜிட்டல் யுகத்தில் யூடியூப் மற்றும் ஆன்லைன் வீடியோ கேம்களில் வரும் ஆபத்தான சவால்களை (Online Challenges) சிறுவர்கள் நிஜ வாழ்க்கை என நம்பி அடியெடுத்து வைப்பது, அவர்களின் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் சிறுவர்கள் இருவரும் காயமேதுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், பெற்றோர் தங்களது பிள்ளைகள் மொபைல் போன்களில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபரீத வீடியோக்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.