மும்பையில் சைனீஸ் உணவுகளான ‘டிரிபிள் ஷெஸ்வான் ஃபிரைடு ரைஸ்’ மற்றும் நூடுல்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நகரில் உள்ள உணவகங்களில் நடத்திய அதிரடி ஆய்வில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய இரு பிரபல உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பையின் முலுண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த ‘சைனாடவுன் ஃபாஸ்ட் ஃபுட் சென்டர்’ மற்றும் மஹிம் பகுதியில் உள்ள ‘லெனக்சிஸ் ஃபுட்வொர்க்ஸ்’ ஆகிய உணவகங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சமையலறை பராமரிப்பு, உணவு கையாளுதல் மற்றும் தூய்மை அமைப்பில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முலுண்ட் சைனாடவுன் உணவகத்தில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போன எண்ணெய், அதிகப்படியான செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அஜினோமோட்டோ (MSG) பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், சமையலறையில் கரப்பான் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்ததும், சைவ மற்றும் அசைவ உணவுகளை ஒரே இடத்திலும் ஒரே பாத்திரங்களிலும் சமைத்து வந்ததும் தெரியவந்தது.

கூடுதலாக, அந்த உணவகத்தின் கழிவுநீர் வடிகால் அமைப்பு சரியாக இல்லாததால், சமையலறைப் பகுதியில் பாசி படிந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இந்தத் தீவிர சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக, சைனாடவுன் உணவகத்தின் வணிகப் பதிவை FDA உடனடியாக இடைநீக்கம் செய்து பூட்டு போட்டது.

அதேபோல, மஹிமில் உள்ள லெனக்சிஸ் நிறுவனத்தில் சமையலறைப் புகைபோக்கிகளில் எண்ணெய் படிவங்கள் நிறைந்து, போதிய காற்றோட்ட வசதி இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உணவகங்கள் முறையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என FDA கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது.