இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் இருந்தாலும், மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஒரு விசித்திரமான ரயில் நிலையத்திற்கு மட்டும் பல ஆண்டுகளாக எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை.
பர்தமான் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், பாங்குரா-மசாகிராம் அகல ரயில் பாதையில் இயங்கி வருகிறது. பெயர் பலகையில் எந்த எழுத்துக்களும் இடம்பெறவில்லை என்றாலும் கூட, தினமும் இங்கு ஆறு முறை ரயில்கள் நின்று செல்வதும், பயணிகள் வந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலைத்திற்குக் பெயர் வைக்கப்படாததற்குக் காரணம் இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் கடுமையான உள்ளூர் தகராறுதான். ரெய்னா மற்றும் ரெய்னாகர் ஆகிய இரண்டு கிராமங்களின் எல்லையில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், புதிய அகல இருப்புப்பாதை அமைக்கப்பட்டபோது எந்தப் பெயரிடுவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ரெய்னா கிராம மக்கள் தங்கள் நிலத்தில் கட்டப்பட்டதால் அந்தப் பெயரைக் கோரியும், பக்கத்து கிராம மக்கள் பழைய பெயரான ‘ரெய்நகர்’ வேண்டும் என்றும் அடிதடியில் இறங்கினர்.
இந்தச் சர்ச்சை நீதிமன்றம் மற்றும் ரயில்வே வாரியம் வரை சென்றதால் மனம் வெறுத்துப்போன அதிகாரிகள், பெய்ப் பலகைகளில் எதையும் எழுதாமல் வெறும் மஞ்சள் நிறப் பலகையை மட்டும் மாட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையத்திற்கு வெளியே எந்தப் பெயரும் பொறிக்கப்படவில்லை என்றாலும், அதிகாரப்பூர்வ ரயில்வே பதிவுகளில் இது பழைய பெயரான ‘ரெய்நகர் (RNGR)’ என்றே அழைக்கப்படுகிறது. இங்கு புதிதாக வந்து இறங்கும் பயணிகள் ஸ்டேஷன் பெயர் தெரியாமல் குழப்பமடைவது தொடர் கதையாகவே உள்ளது. கிராமங்களின் இந்த ஆதிக்கப் போட்டி எப்போது முடிவுக்கு வரும், இந்த நிலையத்திற்கு எப்போது பெயர் பலகை கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
