பெங்களூருவில் உள்ள பிரபல காபி ஆடை நிறுவனமான ‘சப்மகோ’ (Subko) கிளையில், வாடிக்கையாளர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவரது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு உருவக்கேலி  செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள Subko The Craftery என்ற  காபி ஷாப்பிற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், உணவுக்கான ஆர்டர் செய்து பில் கட்டியுள்ளார். பின்னர் பில் ரசீதைச் சரிபார்த்தபோது, வாடிக்கையாளர் பெயருக்குப் பதிலாக “கறுத்த உடல் பருமன் கொண்ட கருப்புச் சட்டை” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Subko didn’t use my name
byu/Prior_Customer_4240 inBangaloreSocial

இதுகுறித்து ரெடிட் தளத்தில் பதிவிட்ட அந்த வாடிக்கையாளர், “என் பெயர் இல்லை, டேபிள் எண்ணும் இல்லை. ஒருவர் என்னை அவமதிக்கும் வகையில் தனது சொந்த விருப்பத்தின் பேரில் வேண்டுமென்றே கணினியில் இதனைத் தட்டச்சு செய்துள்ளார். இது ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்குமா? ஆணுக்கும் உருவக்கேலி அவமானம் தான்” என்று வேதனை தெரிவித்தார். இந்தப்பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி கடுமையான கண்டனங்களைப் பெற்றது.

இதனையடுத்து விவகாரம் பெரிதாவதற்கு முன்பே சுதாரித்துக் கொண்ட ‘சப்மகோ’ நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. “இது போன்ற உடல் கேலி செயல்கள் எந்த வடிவத்திலும், எப்போதுமே மன்னிக்க முடியாத குற்றம். இது எங்களுடைய கூரையின் கீழ் நடந்த கொடூரமான செயல்” என்று நிறுவனம் ஒப்புக்கொண்டது. மேலும், சம்பந்தப்பட்ட பணியாளர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வாடிக்கையாளர் விவரங்களைப் பதிவு செய்யும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் சப்மகோ தெரிவித்துள்ளது.