மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகர் பகுதியில் ஐபோன் வாங்குவது மற்றும் இ.எம்.ஐ தொகையால் ஏற்பட்ட தகராறில், தற்கொலை செய்ய முயன்ற மகனைக் காப்பாற்ற முயன்ற பெற்றோரும் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பாஜிநகரின் கவ்டியா மலை உச்சியில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில், ஒரு குடும்பத்தின் சோகம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. ஜால்னா மாவட்டத்தைச் சேர்ந்த சாண்குடே குடும்பம் கடந்த 18 ஆண்டுகளாகச் சம்பாஜிநகரில் வசித்து வருகிறது. இவர்களின் 16 வயது மகன் குனால், 10-ஆம் வகுப்பில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று 11-ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்துள்ளது.
ஆனால், சமீபத்தில் அவர் வாங்கிய ஐபோனின் இ.எம்.ஐ தவணைகள் மற்றும் பணம் தொடர்பான தகராறால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குனால், தனது கையில் இருந்த ஐபோன், கைக்கடிகாரம் மற்றும் வெள்ளிச் சங்கிலியை வீசிவிட்டு ஆக்ரோஷமாக கவ்டியா மலையின் உச்சிக்கு ஓடியுள்ளான். பதறிப்போன பெற்றோரும் அவன்பின் ஓடிச் சென்றுள்ளனர்.
பழைய வைரலான வீடியோ காட்சிகளைத் தாண்டி புதிய விவரங்களின்படி, மலையின் உச்சியில் ஆபத்தான விளிம்பில் நின்ற குநாலைக் காப்பாற்ற அவனது தாய் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. ஆனால், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத குனால், சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதித்துள்ளான். அவன் குதித்த வேகத்தில் காற்றில் பறந்த மகனைத் பிடிக்க முயன்ற தந்தை முரளிதரன் மற்றும் தாய் இருவரும் நிலைதடுமாறி அதே பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இளம் தலைமுறையினரிடம் அதிகரித்து வரும் மன அழுத்தமும், சிறு விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் போக்கும் எத்தகைய கொடூரமான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தக் குடும்பத்தின் அழிவு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
