மகாராஷ்டிர மாநிலம் சத்தம்பதி சம்பாஜிநகர் பகுதியில் ஐபோன் வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற மகனைக் காப்பாற்ற முயன்ற பெற்றாரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
சம்பாஜிநகரின் திஸ்கான் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் குனால் சாண்குடே என்ற இளைஞர், தனது பெற்றோரிடம் ஐபோன் கேட்டு அடம் பிடித்துள்ளார். இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குனால், அங்குள்ள அபாயகரமான கவ்டியா மலைக்குச் சென்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
மகனின் செயலால் பதறிப்போன தந்தை முரளிதரன் (48) மற்றும் தாய் சங்கீதா இருவரும் உடனடியாக மலை உச்சிக்கு ஓடிச் சென்றுள்ளனர். அங்கு வெளியான புதிய வீடியோவில், அந்தப் பாசமான தாய் தனது மகனின் காலில் விழுந்து, “வேண்டாம் மகனே, என் காலில் விழுகிறேன், கீழே வா” என்று கதறி அழுவது பதிவாகியுள்ளது. ஆனால், எதையும் கேட்காத குனால் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
மகனைத் தடுத்துக் காப்பாற்ற முயன்ற தந்தை முரளிதரன், குநாலைப் பிடிப்பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி இருவரும் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் தன் கண் முன்பே கணவனும் மகனும் பலியாவதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த தாய் சங்கீதாவும், சில நிமிடங்களில் அதே மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு வலைகளை விரிப்பதற்குள் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பா அவசரப்பட்டு அப்படி கூறிவிட்டார் நான் என் தாலியை வேண்டுமானாலும் கழற்றித் தருகிறேன். உன் அப்பாவை விட்டுட்டு நான் வந்துவிடுகிறேன். தயவுசெய்து கீழே இறங்கி வா என அந்த தாய் கதறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
