அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை திடீரென முறிந்த நிலையில், கனடாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடா ஒரு அமெரிக்க மாகாணமாக இல்லாமலேயே, மாகாணத்துக்குக் கிடைக்கும் பலன்களை பெற விரும்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக அமெரிக்க விவசாயிகளுக்கு கனடா அதிக வரி விதித்து வந்ததாகவும், இனி அதை அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த பொருட்களில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த மாற்றங்கள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும், அவர்கள் கேட்டதை கனடா வழங்காது என்றும் கார்னி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கனடா தரப்பில் வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்கா சில சலுகைகளை வழங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மற்ற வர்த்தக கூட்டாளிகளை விட கனடாவுக்கு அதிக முன்னுரிமை கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், பிற நாடுகளுடன் கனடா மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகளால் பேச்சுவார்த்தை முறிந்ததாக பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கனடாவின் பிரெஞ்சு மொழி மற்றும் கியூபெக் மாகாணத்தின் கலாசார விவகாரங்களில் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அழுத்தங்களை கொடுத்ததாகவும் கார்னி குற்றம்சாட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் மற்றும் எல்லை மாகாண ஆளுநர்களும் டிரம்பின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையும் நிலுவையில் இருப்பதால், அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.