தைராய்டு அறுவை சிகிச்சை என்றாலே கழுத்தின் முன்பகுதியில் தழும்பு ஏற்படுமோ என்ற பயம் பலருக்கும் இருக்கும். ஆனால், நவீன மருத்துவ வளர்ச்சியால் இப்போது கழுத்தில் எந்தவிதத் தழும்பும் இல்லாமல் தைராய்டு அறுவை சிகிச்சை செய்யும் புதிய நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. குறிப்பாக, இளம் நோயாளிகள் பலரும் இந்தத் தழும்பற்ற சிகிச்சை முறையையே அதிகம் விரம்பத் தொடங்கியுள்ளனர்.

வழக்கமான அறுவை சிகிச்சையில் கழுத்தின் வெளிப்புறத்தில் கீறல் செய்யப்படுவதால், காயம் ஆறிய பிறகும் தழும்பு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் ‘டிரான்ஸ்ஓரல் எண்டோஸ்கோபிக் தைராய்டெக்டமி’  என்ற நவீன முறையில், வாய் வழியாகவே தைராய்டு சுரப்பியை அணுகி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் கழுத்தின் வெளிப்புறத்தில் எந்தத் தழும்பும் ஏற்படுவதில்லை.

கழுத்து என்பது எளிதில் வெளியில் தெரியக்கூடிய பகுதி என்பதால், நிரந்தரத் தழும்பு ஏற்படுவதை இளம் நோயாளிகள் பெரும் கவலையாகக் கருதுகின்றனர். இதனாலேயே, ‘சி.கே. பிர்லா’ மருத்துவமனைகளின் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.கே. பாலா குறிப்பிடுவது போல, தழும்பில்லாத அல்லது குறைந்தளவு தழும்பு மட்டுமே தரும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகள் அதிகளவில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், இந்தத் தழும்பற்ற அறுவை சிகிச்சை முறை அனைத்து நோயாளிகளுக்கும் ஏற்றது அல்ல. தைராய்டு கட்டியின் அளவு, அதன் தன்மை, புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பது போன்ற பல காரணிகளைக் கவனமாக ஆராய்ந்த பிறகே மருத்துவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். சில சூழல்களில், வழக்கமான அறுவை சிகிச்சை முறையே மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

அழகுக்காக மட்டுமே இந்த முறையைத் தேர்ந்தெடுக்காமல், பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தைராய்டு பிரச்சனைக்குச் பாதுகாப்பான சிகிச்சை அளிப்பதுதான் முதன்மை இலக்கு என்பதால், தங்களுக்கு எந்த சிகிச்சை முறை சிறந்தது என்பதைத் தகுதியான அறுவை சிகிச்சை நிபுணருடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.