திபெத் மீது சீனா தனது அரசியல் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘இன்டர்நேஷனல் கேம்பெயின் ஃபார் திபெத்’ அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, திபெத் நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளில் திபெத்தியர்களின் பங்களிப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் புதிய அறிக்கை கூறுகிறது. புதிய சட்டங்கள், கட்சி உத்தரவுகள் மற்றும் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் மூலம் சீனா தனது கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டில் மாகாண மற்றும் மாவட்ட அளவிலான கட்சி, அரசு, பாதுகாப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான 10 நிறுவனங்களில் மொத்தம் 240 மூத்த தலைமைப் பதவிகள் ஆய்வு செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 62 பதவிகளில் மட்டுமே திபெத்தியர்கள் இருந்ததாகவும், இது 25.8 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 178 பதவிகளில், அதாவது 74.2 சதவீத இடங்களில் திபெத்தியர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ICT தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியா மற்றும் நேபாளத்தில் வசிக்கும் திபெத்தியர்களுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் நிதியுதவிகளை அமெரிக்கா மீண்டும் முழுமையாக வழங்க வேண்டும் என ICT வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவின் தர்மசாலாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய திபெத்திய நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்களின் பிரதிநிதித்துவ அமைப்பாக CTA செயல்பட்டு வருகிறது.
ICT அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புப் பிரிவு தலைவர் பூச்சுங் செரிங், அமெரிக்க நாடாளுமன்றம் ‘அஷ்யூரிங் தி ஃபியூச்சர் ஆஃப் திபெத் ஆக்ட்’ என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், திபெத்திய மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அமைப்பாக CTA-வுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கிழக்கு திபெத்தைச் சேர்ந்த மூத்த திபெத்திய அதிகாரி ஒருவர், திபெத்திய புத்த மத மரபுகள் மீது சீனா விதித்த புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த மறுத்ததாகக் கூறி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
