அமெரிக்கா – ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் விருப்பம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், தற்போது ஈரான் வலிமையான மற்றும் கௌரவமான நிலையில் இருப்பதாகவும், இந்தச் சூழலில் போரை முடிவுக்கு கொண்டு வருவது நல்லது என்றும் கூறியுள்ளார். உலக நாடுகள் ஈரானின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க ஈரான் முயற்சி மேற்கொள்வது தெரியவந்துள்ளது.
இதனிடையே, ஈரான் மற்றும் ஓமன் அதிகாரிகள் அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஈரான் ராணுவம் எந்தவொரு புதிய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முழுமையாக தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவழி பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் தங்கள் படைகள் தயார் நிலையில் இருப்பதாக ஈரான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமைதிப் பேச்சுக்கான முயற்சி ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் ராணுவ பதற்றமும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மேலும், அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஈரான் அதிபர் பெசெஷ்கியான் ஆதரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஈரானின் கடும்போக்குவாதிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் முன் ஈரான் சரணடைந்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். ஒப்பந்தத்தில் ஈரான் தோல்வியை ஏற்றுக்கொண்டதாகக் காட்டும் எந்த அம்சமும் இல்லை என்றும், ஒப்பந்தத்தின் பெரும்பாலான வாக்குறுதிகள் அமெரிக்கா தரப்புடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் அமைதி ஒப்பந்தத்தை விரும்புவதாக கூறப்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஈரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்பலாம், ஆனால் சரியான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அது தயாராக இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு கடுமையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஈரான் போரை முடிக்க விருப்பம் தெரிவித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய நிபந்தனைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின்மை காரணமாக உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
