டெல்லியைச் சேர்ந்த 31 வயதான வினய் குப்தா என்ற மென்பொருள் பொறியாளர், அடோப் நிறுவனத்தில் ஆண்டுக்கு ₹60 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி ரேகாவுக்கும் இடையே, தங்களது 4 மாத இரட்டைக் குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாகத் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோபமடைந்த ரேகா, தனது வீட்டை விட்டு வெளியேறித் தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திலேயே ரேகாவின் தந்தை, சகோதரர்கள், நாத்தனார் உள்ளிட்ட குடும்பத்தினர் காரில் வினய்யின் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த மாமனார் குடும்பத்தினர், வினய்யை சரமாரியாகக் தாக்கியுள்ளனர். வினய்யின் தாய் அவர்களைக் தடுக்க முயன்றும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் வினய்யின் கழுத்தை நெரித்தும், மார்பில் உதைத்தும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த வினய்யை அண்டை வீட்டார் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்தத் தாக்குதலுக்கு முன்பாகவே ரேகா வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு, திட்டமிட்டே இக்கொடூரத்தைச் செய்ததாக வினய்யின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வினய்யின் மனைவி ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி ஆகிய 4 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தொடங்கிய சிறு சண்டை உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.