அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் 18 வயது இளம்பெண் அன்வேஷா சைகியா உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போகமுரா நா-பமுவா கிராமத்தைச் சேர்ந்த அன்வேஷா, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்வேஷாவின் குடும்பத்தினர் காவல் நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தங்களது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், அவர் வீட்டை விட்டு வெளியேறியது முதல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வரையிலான சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆர்யன் கோஸ்வாமி என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்; அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஆகஸ்ட் 15-ஆம் தேதி கௌரி அபார்ட்மென்ட்டில் நடந்ததாக கூறப்படும் சந்திப்பு குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அங்கு இருந்ததாக கூறப்படும் மோனலிஷா நாத், அர்பிதா ககாட்டி, குஷி உள்ளிட்ட மூன்று பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அன்வேஷா போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதன் காரணமாக உடல்நிலை மோசமடைந்ததாகவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால், போதைப்பொருள் அதிகப்படியான பயன்பாடே உயிரிழப்புக்கான காரணம் என்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஆர்யன் கோஸ்வாமி தாம் அன்வேஷாவை கொலை செய்யவில்லை என்றும், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது காப்பாற்ற முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண்ணான மோனலிஷா நாத்தும், அன்வேஷா தானாகவே போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். அதேவேளையில், அன்வேஷாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவர் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ரத்தம் இருந்ததாகவும் கூறப்படும் தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதால், முழுமையான விசாரணைக்குப் பிறகே உயிரிழப்பின் உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
