அருணாசலப் பிரதேச மாநிலம் இடாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன்னை “சீனப் பெண்” என்று அழைக்க வேண்டாம் என கண்ணீருடன் கேட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த தங்களை சிலர் தவறாக வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவது வேதனை அளிப்பதாக அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுவயதிலேயே இதுபோன்ற கருத்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
வைரலாகி வரும் அந்த விடியோவில், “நாங்களும் இந்தியர்கள்தான், எங்களை சீனர்கள் என்று அழைக்காதீர்கள்” என சிறுமி தனது மழலை மொழியில் கூறுகிறார். தன்னை ஒருவர் சீனப் பெண் என்று கேட்டதாகவும், அவ்வாறு அழைக்கும்போது தனக்கு மிகவும் கோபமாகவும் வருத்தமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் இடாநகரில் வசிப்பதாகக் கூறிய சிறுமி, தங்களது இந்திய அடையாளத்தை மதிக்குமாறு கைகளை கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
It’s really disheartening to see young kids from the Northeast having to make videos pleading with people not to call them Chinese. No Indian should have to prove that they belong in their own country. We need more awareness, empathy, and respect for our fellow citizens. pic.twitter.com/h31UN52BSV
— lolflix (@lolflix_) August 19, 2026
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் தோற்றத்தை வைத்து அவர்களை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என தவறாக அடையாளப்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்தச் சிறுமியின் பேச்சு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது அடையாளத்தை மிகவும் எளிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சிறுமி எடுத்துக் கூறிய விதம் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. பலரும் சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விடியோவைப் பார்த்த பலர், சிறுமியின் மனதை புண்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது என்றும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களின் அடையாளத்தையும் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். “நாங்களும் இந்தியர்கள்தான்” என்ற சிறுமியின் வார்த்தைகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு சிறுமியின் மழலைக் குரலில் வெளிப்பட்ட இந்த வேண்டுகோள், நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
