ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் சாப்பிடும் உணவின் தரம் மட்டுமல்லாமல், எதை எவ்வளவு சாப்பிடுகிறோம், எப்படி தயாரிக்கிறோம் என்பதும் முக்கியம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுப் பழக்கங்களை ஊக்குவித்து வருகிறது. அதன் “சரியான உணவு” இயக்கமும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுப் பழக்கங்களை வலியுறுத்துகிறது.

முதலில் உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவது முக்கியம். உணவு பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களில், தினசரி உணவில் இவற்றைக் குறைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உப்பை ஒரு நாளைக்கு 5 கிராமுக்குள் வைத்துக்கொள்ளவும், சேர்க்கப்படும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் பரிந்துரைகள் உள்ளன.

அடுத்ததாக உணவின் அளவைக் கவனிப்பது அவசியம். உணவை அவசரமாக சாப்பிடாமல் நன்றாக மென்று சாப்பிடுவதும், சாப்பிடும்போது கைபேசி போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதும் உணவு பழக்கத்தை மேம்படுத்த உதவும் என்று உணவு பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

உணவு பாதுகாப்பிலும் கவனம் தேவை. சமைத்த உணவை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைக்காமல் இருப்பது, பச்சை உணவு மற்றும் சமைத்த உணவு ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பார்த்துக்கொள்வது, சமையலுக்கு பாதுகாப்பான தண்ணீரைப் பயன்படுத்துவது போன்றவை முக்கியம். சமைத்த உணவை சேமிக்க வேண்டியிருந்தால், சரியான வெப்பநிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்துகிறது.