மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 734 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும், அதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதும் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உருவெடுத்துள்ளது. கிராமப்புற மற்றும் விவசாய நிலங்கள் நிறைந்த இந்தப் பகுதியில், பாம்புக்கடி பாதிப்புகள் திடீரென அதிவேகமாக உயர்ந்துள்ளது மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
மழைக்காலம் மற்றும் விவசாயப் பணிகள் தீவிரமடையும் காலகட்டங்களில், பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், குறுகிய காலத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது சாதாரண விஷயமல்ல.
வயல்வெளிகளிலும், வீடுகளின் சுற்றுப்புறங்களிலும் பொதுமக்கள் நடமாடும் போது, போதிய வெளிச்சம் இல்லாததும், கவனக்குறைவாகச் செல்வதும் இத்தகைய விபத்துகளுக்கு முதன்மைவழியாக அமைந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, பாம்புக்கடிக்கு உடனடியாக உரிய முதலுதவியும், சரியான நேரத்தில் ‘பாம்புக்கடி எதிர்ப்புச் சீரம்’ சிகிச்சையும் கிடைக்காததே உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் கிராமப்புறங்களில் இன்னமும் தொடரும் மூடநம்பிக்கைகள் காரணமாக, பாம்புக்கடி பட்டவுடன் மருத்துவமனைக்குச் செல்லாமல் நாட்டு வைத்தியம் அல்லது மந்திரவாதிகளை நாடி நேர விரயம் செய்வதும் இந்த சோகமான மரணங்களுக்கு வழிவகுக்கிறது.
இந்தத் திடீர் ஆபத்தைக் கட்டுப்படுத்த, அமராவதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மருந்துகள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, பாம்புக்கடிக்கு ஆளாகும் நபர்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே தீவிரமாக ஏற்படுத்த வேண்டியது தற்போதைய அவசர தேவையாகும்.
