கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு சம்வம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிச் சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள், வகுப்பறைக்கு முன்பு மேஜை போட்டு அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த மேஜையில் சாப்பாட்டுடன் மது அருந்துவதற்கான தின்பண்டங்களும் வைக்கப்பட்டுள்ளன. பாட்டிலிலிருந்த மதுவை அந்த மாணவிகள் இருவரும் மாறி மாறி குடித்துள்ளனர். இந்த வெட்கக்கேடான செயலை மற்றொரு மாணவி தன் செல்போனில் வீடியோவாகப் படம் பிடித்துள்ளார். அப்போது, “மது குடிப்பதை ஏன் படம் பிடிக்கிறாய்?” என்று ஒரு மாணவி கேட்பது போன்ற உரையாடல்களும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி அதிரடி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது உறுதியானது. மேலும், விடுமுறை நாளில் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்ற சமயத்தில்தான் இந்த காரியத்தில் மாணவிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
View this post on Instagram
இந்த விவகாரத்தில் பள்ளியின் பாதுகாப்பும் ஒழுக்கமும் கேள்விக்குறியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையை நாகர்கோவிலில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில், பச்சிளம் வயது மாணவிகளுக்கு அந்த மதுபாட்டில் எப்படி கிடைத்தது? இதன் பின்னணியில் யாருடைய உதவி உள்ளது? என்பது குறித்து காவல்துறையினரும் கல்வித்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
