பீகார் மாநிலம் ககாரியா ரயில் நிலையத்தில் தவறான ரயிலில் ஏறிய தம்பதியினர், தங்களது சிறுமியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, தம்பதியினர் குழந்தையுடன் கீழே குதித்துள்ளனர். இதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உடனடியாக ஓடிச் சென்று அவர்களை காப்பாற்றியுள்ளார்.
ரயில்வே சந்திப்பில் அந்த தம்பதியினர் தவறான ரயிலில் ஏறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்ட பிறகுதான் தாங்கள் தவறான ரயிலில் இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இதையடுத்து, ரயில் மெதுவாக செல்லும் நேரத்தில் இறங்குவதற்குப் பதிலாக, ஓடும் ரயிலில் இருந்து குழந்தையுடன் கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
தம்பதியினர் மற்றும் குழந்தை கீழே விழுந்ததை பார்த்த ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உடனடியாக அவர்களை நோக்கி ஓடினார். குறிப்பாக சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, குடும்பத்தினரையும் ஆபத்தான நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். வீரரின் உடனடி நடவடிக்கையால் மூவரும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஓடும் ரயிலில் இருந்து இறங்குவது மிகவும் ஆபத்தானது என்பதால், பயணிகள் அவசரப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரயில்வே பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர். ரயிலில் தவறாக ஏறிவிட்டால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சரியான ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
