மாதவிடாய் நாட்களைத் தவிர்த்து பெண்களுக்கு இடைப்பட்ட நாட்களில் திடீரென ஏற்படும் லேசான ரத்தப்போக்கை மருத்துவ ரீதியாக ‘ஸ்பாட்டிங்’ என்று அழைக்கின்றனர். உடலின் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள், கருமுட்டை வெளியாகும் காலம்  மற்றும் புதிய கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்குவது போன்ற சாதாரண காரணங்களால் இது ஏற்படலாம். ஆனால், இத்தகைய ரத்தப்போக்கு தொடர்ந்து அல்லது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கருப்பையில் உருவாகும் ஃபைப்ராய்ட்ஸ் அல்லது பாலிப்ஸ் போன்ற கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும் இத்தகைய ஒழுங்கற்ற ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். குறிப்பாக, தைராய்டு கோளாறுகள் உள்ளவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் வரலாம். அதேபோல, கர்ப்பம் தரிக்கும் வயதில் உள்ள பெண்களுக்கு எதிர்பாராத ரத்தப்போக்குடன் வயிற்றுவலி அல்லது இடுப்புவலி இருந்தால், கர்ப்பம் தொடர்பான பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவது, பிறப்புறுப்புத் தொற்று, வறட்சி அல்லது கருப்பை வாயில் உள்ள பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம். மேலும், பூப்படைதல் காலம் முடிவடையும் ‘பெரிமெனோபாஸ்’  பருவத்தில் மாதவிடாய் சுழற்சி மற்றும் ரத்தப்போக்கின் அளவில் இயல்பாகவே மாறுபாடுகள் ஏற்படும். இருப்பினும், மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு (Post-menopause) ஏற்படும் ரத்தப்போக்கை ஒருபோதும் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அதிக ரத்தப்போக்கு, கடுமையான வயிற்றுவலி, தலைச்சுற்றல், காய்ச்சல் அல்லது அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் ரத்தப்போக்குடன் சேர்ந்து இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இணையத்தில் பார்த்துத் தானாகவே காரணங்களை முடிவெடுக்காமல், மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான அல்ட்ராசவுண்ட் அல்லது ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது சரியான தீர்வைத் தரும்.

பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சி முறையையும், இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் நாட்காட்டியில் பதிவு செய்து வைப்பது மருத்துவரிடம் ஆலோசிக்கப் பெரிதும் உதவும். ஒருமுறை ஏற்படும் சிறிய ரத்தக்கசிவுக்கு பயப்படத் தேவையில்லை என்றாலும், மீண்டும் மீண்டும் நிகழும் ரத்தப்போக்கை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது பெண்களின் உடல்நலத்திற்குப் பாதுகாப்பானது.