2026-ஆம் ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. நிலவு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சூரியனின் ஒளி மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு சுமார் 9.04 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்பதே முக்கிய தகவலாக உள்ளது. கிரகணம் நடைபெறும் நேரத்தில் இந்தியாவில் இரவு நேரமாக இருப்பதால், சூரியன் அடிவானத்துக்கு கீழே இருக்கும். இதனால் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியாது.
உலகின் சில பகுதிகளில் மட்டும் இந்த அரிய நிகழ்வை முழுமையாகக் காண முடியும். குறிப்பாக கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் ஒரு சிறிய பகுதி ஆகிய இடங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மேலும் வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
இந்திய நேரப்படி இந்த கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு தொடங்கி, ஆகஸ்ட் 13-ஆம் தேதி அதிகாலை வரை நீடிக்கும். அதிகபட்ச கிரகணம் இரவு சுமார் 11.16 மணியளவில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இதைப் பார்க்க முடியாவிட்டாலும், உலகின் பல பகுதிகளில் வானியல் ஆர்வலர்களுக்கு இது முக்கியமான வானியல் நிகழ்வாக அமைய உள்ளது.
