தென் கரோலினாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த கோர விபத்து தொடர்பான புதிய காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த புதுமண தம்பதியினரான சமந்தா ஹட்சின்சன் மற்றும் அவரது கணவர் மீது, போதையில்  ஜேமி லீ கொமோரோஸ்கி என்ற பெண் அதிவேகமாக காரை மோதினார்.

இந்த கோர விபத்தில் மணமகள் சமந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணமகன் மற்றும் சில விருந்தினர்கள் படுகாயமடைந்தனர். சட்டப்பூர்வ வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு மணிக்கு 65 மைல் வேகத்தில் காரை இயக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கொமோரோஸ்கியின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. காவல் நிலையத்தில் கைவிலங்குடன் அமர்ந்திருந்த அவர், தான் செய்த கொடூரமான குற்றத்தின் தீவிரத்தை உணராமல், தன்னை உடனடியாக வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் அழுது புலம்பியுள்ளார்.

“நான் இதை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டும்” என்று அவர் அலட்சியமாகக் கூறியதுடன், தன்னை ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

மேலும், காவல் நிலையத்திலிருந்த கேமராக்களைப் பார்த்தும், தன் தந்தையைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை என்று புகார் கூறி நாடகமாடியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் நடந்து கொண்ட முறையைப் பார்த்துத் தானே கேலி செய்துகொண்டு, “நான் ஏதோ ஒரு சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறேன்” என்றும் சாதாரணமாகப் பேசியுள்ளார். இந்த வழக்கில் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொமோரோஸ்கிக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.