தினசரி பல் துலக்கும்போதோ அல்லது கடினமான உணவுகளை மென்று சாப்பிடும்போதோ பலருக்கும் ஈறுகளில் இருந்து ரத்தம் கசியும் பிரச்சனை ஏற்படுவது உண்டு. பல நேரங்களில் இதனை நாம் சாதாரண ஒரு விஷயமாகக் கருதி கடந்து போய்விடுகிறோம். ஆனால், ஈறுகளில் ரத்தம் வருவது என்பது வெறும் வாய் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; அது உடலில் இருக்கும் வேறு சில தீவிரமான பாதிப்புகளின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக வாய் சுகாதாரம் சரியாகப் பராமரிக்கப்படாத போது ஈறுகளில் பாக்டீரியாக்கள் தங்கி வீக்கத்தையும் ரத்தப்போக்கையும் ஏற்படுத்துகின்றன. இதுமட்டுமன்றி, உடலில் வைட்டமின் ‘சி’ அல்லது வைட்டமின் ‘கே’ குறைபாடு இருந்தால் ஈறுகள் பலவீனமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அளவுக்கு அதிகமான மன அழுத்தம், சரியான தூக்கமின்மை மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும்போதும் கூட ஈறுகளில் ரத்தம் வரக்கூடும் என்பதால் இதனை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஈறுகளில் லேசான ரத்தப்போக்கு இருக்கும்போதே முறையான வாய் சுகாதாரத்தைப் பின்பற்றி, பல் மருத்துவரை அணுகி ஆலோசன பெற வேண்டும். குறிப்பாக, ஈறுகளில் தொடர்ந்து ரத்தம் வருவது, வீக்கம் மற்றும் வலி குறையாமல் இருப்பது, வாயில் துர்நாற்றம் வீசுவது அல்லது பற்கள் ஆடத் தொடங்குவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
ஆரம்பக்கட்டத்திலேயே இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், பெரிய அளவிலான உடல்நலக் கோளாறுகளிலிருந்தும் நம்மைத் தடுத்துக் கொள்ள முடியும். எனவே, ஈறுகளில் ஏற்படும் சிறிய ரத்தப்போக்கையும் அலட்சியப்படுத்தாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவதே சிறந்தது!
