பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனம்  வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்ட  அறிக்கையில், முதன்முறையாக பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பயங்கரவாதத் தாக்குதல்களாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதன்மை இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் ஆகியவை நாட்டை தீவிர நிலைக்குத் தள்ளியுள்ளன. குறிப்பாக, நாட்டின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய எல்லைப் பகுதிகளில் மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமான தாக்குதல்களும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்   மற்றும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்  போன்ற அமைப்புகளின் தாக்குதல்கள் அங்கு பலமடங்கு அதிகரித்துள்ளன.

அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நிலவும் சுமுகமற்ற எல்லை உறவுகள், உள்நாட்டு பாதுகாப்பு பலவீனம் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் அரசு அதிகாரத்தின் பிடி தளர்ந்தது போன்றவை பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் வலுப்பெற முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, எல்லையோரப் பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள் தங்களின் இருப்பிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டதாக இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிடுகிறது.

உலகளவில் பல நாடுகளில் பயங்கரவாத உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்து வரும் சூழலில், பாகிஸ்தானில் மட்டும் தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணிலேயே பயங்கரவாத அமைப்புகளுக்குக் கொடுத்த ஊக்கமும், சர்வதேச எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதும் இன்று அந்நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.